அஷ்ஷெய்க் அல்-இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கல்வி கற்பவர் (தாலிபுல் இல்ம்) மீது மற்றுமொரு பொறுப்பு உள்ளது;
(அது என்னவென்றால்: கல்வி கற்றல் போன்ற வணக்கங்களை) மகத்துவமிக்க அல்லாஹ்வின் முகத்தை நாடி மட்டுமே செய்வது, அவனது கண்காணிப்பை உணர்ந்து நடப்பது, மேலும் கண்ணியமிக்க அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதையும், தன்மீதுள்ள மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதையும், தன் மீது குற்றப்பழி இல்லாமல் பார்த்துக்கொள்வதையும், மக்களுக்குப் பயன் அளிப்பதையுமே தனது குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.
அவர் செல்வம் மற்றும் அழியக்கூடிய உலக ஆதாயங்களை குறிக்கோளாகக் கொள்ளக் கூடாது; ஏனெனில் அது நயவஞ்சகர்கள் மற்றும் அவர்களைப் போன்ற உலகவாதிகளின் பண்பாகும். முகஸ்துதியையோ அல்லது மற்றவர்கள் தன்னை புகழ்வதையோ அவர் நோக்கமாகக் கொள்ளக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் அடியார்களுக்குப் பயன் அளிப்பதையும், அதற்கு முன்னதாகத் தனது ரப்பை (தான் முதலில்) திருப்திப்படுத்துவதையுமே தனது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் தான் கூறுவதிலும், மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்குவதிலும், தான் செயல்படுவதிலும் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இருக்க வேண்டும்.
அவர் (கல்வி கற்பதிலோ அல்லது சத்தியத்தை எடுத்து நடப்பதிலோ) மெத்தனமாக இருப்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; ஏனெனில் கல்வி கற்பவர் (மற்றவர்களால்) பின்பற்றப்படுபவர் ஆவார். அவருடைய அணுகுமுறைகளும் செயல்களும் முன்மாதிரியாகக் கொள்ளப்படும். அவர் ஒரு ஆசிரியராக இருந்தால், மாணவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள். அவர் ஒரு முஃப்தியாக இருந்தால், மக்கள் அவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர் ஒரு அழைப்பாளராக இருந்தாலும் அவ்வாறே. அவர் இழைக்கும் தவறால் விளையும் பாதிப்பு மிக விபரீதமானது. அவர் ஒரு நீதிபதியாக இருந்தால், விஷயம் இன்னும் பாரதூரமானது.

